புதுடெல்லி: இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார்.
மொனாக்கோவில் தற்போது டயமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பங்கேற்ற அவினாஷ் சாப்ளே தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.
வாட்டர் ஜம்ப் பகுதியில் அவர் குதிக்கும்போது கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு மூட்டு, கால், தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரின் பயிற்சியாளர் அம்ரிஷ் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “மூட்டுப் பகுதியில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். ஓரிரு வாரங்களில் அவர் குணமடைந்து வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவார்” என்றார்.