வாஷிங்டன்: இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை அமெரிக்க புலனாய்வுத்துறை (எப்பிஐ) கைது செய்தது.
இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள், ரவுடிகள் பலர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்குள் சட்டவிரோதமாக செல்லும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவர்கள் அங்கும் ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், ஆள்கடத்தல், சித்ரவதை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் முக்கியமான நபர் பவித்தர் சிங் பதாலா. இவர் பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர். பல தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய இவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தேடி வந்தது.
இந்நிலையில் பவித்தர் சிங் பதாலா உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. இவர்கள் சான் ஜோகுவின் மாகாணத்தில் ரவுடி கும்பல் போல் செயல்பட்டு ஆள் கடத்தல், சித்ரவதை செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கைது செய்ய உள்ளூர் போலீஸாரும், எப்பிஐ குழுவினரும் முடிவு செய்தனர். பல இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை மூலம் பவித்தர் சிங் பதாலா, தில்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், மன்ப்ரீத் ரந்த்தாவா, சரப்ஜித் சிங், குர்தஜ் சிங் மற்றும் விஷால் ஆகிய 8 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வைத்திருந்த சட்டவிரோத இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.