திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, எம்.பி. அண்ணாதுரை, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் நிர்மலா வேல்மாறனுக்கு தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் வழங்கி, மேயருக்கான அங்கியை அணிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இங்கு ஆண் கவுன்சிலர்களைவிட பெண் கவுன்சிலர்கள்தான் அதிகம் உள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் அனைவரும் மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைக்க வேண்டும். இங்குள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கையை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது. திருவண்ணாமலை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகிவிட்டது.
பாதாள சாக்கடை திட்டம்: திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை முதல்வரிடம் கோரிக்கைவைத்து, அமைச்சர் எ.வ.வேலு கொண்டு வந்துள்ளார். ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ.30 கோடியில் காய்கறி மார்க்கெட், ரூ.30 கோடி மதிப்பில் மாடவீதியில் சிமென்ட் சாலை என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.90 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேயருக்கான செங்கோலைப் பெற்றுள்ள மேயர் நிர்மலா வேல்மறான், அனைவரையும் ஒருங்கிணைத்து, மாநகராட்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல வேண்டும். எப்போதெல்லாம் திமுக அரசு அமைகிறதோ, அப்போதெல்லாம் திருவண்ணாமலை வளர்ச்சிக்கு திமுக அரசு அடித்தளமிட்டு வருகிறது. திருவண்ணாமலை வளர்ச்சிக்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். இவ்வாறு உதயநிதி பேசினார்.