நாமக்கல்: பழநி மலையில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைப் பகுதியில் மத்திய புவியியல் துறை மூலம் மாலிப்டினம் உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலிப்டினம் சுரங்கம் தோண்டி எடுத்தால் பழநி மலைப் பகுதிகள் அனைத்தும் அழிந்து போகும்.
பழநி மலையின் மீதும் அங்குள்ள முருகன் மீதும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் மிகுந்த பற்று வைத்துள்ளனர். மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியைப்போல, இப்பகுதியில் சமண படுகைகளும், மிகப்பெரிய பல்லுயிர் தளங்களும் உள்ளன.
இங்கு சுரங்கம் தோண்டினால் பழநி மலை மற்றும் இடும்பன் மலை, ஐவர் மலை, நெய்க்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். மதுரையில் முருகன் மாநாடு நடத்துபவர்கள், பழநி முருகன் கோயிலில் சுரங்கம் தோண்ட நினைப்பது தவறு. இந்த விவகாரத்தில், எக்காரணத்தைக் கொண்டும் நாம் கவனக் குறைவாக இருந்து விடக்கூடாது.
மாலிப்டினம் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்தால், முருக பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். மேலும், சுரங்கம் தோண்டும் மத்திய அரசின் நடவடிக்கையைத் தமிழக அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.