திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை, மணலி ஐ.ஓ.சி.எல்-இல் இருந்து, சரக்கு ரயில் ஒன்று, 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று (ஜூலை 13) அதிகாலை மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதனால், சுமார் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் டேங்கர்களில் உரசல் ஏற்பட்டு ஒரு டேங்கரில் தீப்பற்றியது. அந்த தீ மளமளவென அடுத்தடுத்த 6 டேங்கர்களுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதுகுறித்து, தகவலறிந்து, திருவள்ளூர், திரூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள், தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, ரயில்வே ஐஜி ராமகிருஷ்ணன், எஸ்பி ஈஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து, தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர்; பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.
குறிப்பாக, விபத்து நடந்துள்ள பகுதி அருகே வசிக்கும் 50 இருளர், நரிக்குறவர் இன குடும்பங்களை சேர்ந்தோர் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
விபத்தால் ரயில் பாதையில் உள்ள சிக்னல் ஃபோர்டுகள், மின்இனைப்புகள் சேதமடைந்தன. இதனால், சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்கள் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன; சென்னையில் இருந்து, ஜோலார்பேட்டை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்தால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை என தெரியும் சூழலில், தீ விபத்து காரணமாக கடும் புகை கிளம்பியுள்ளது. ஆகவே, பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டாம் எனவும், விபத்து நடந்துள்ள பகுதி அருகே வசிப்பவர்களில், சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் எஸ்பி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.