ஜூலை 18-ம் தேதி சுமார் 11 படங்கள் வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி நடித்துள்ள ‘கூலி’ வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக பல்வேறு படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
ஜூலை 18-ம் தேதி அன்று சுமார் 11 படங்கள் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘பன் பட்டர் ஜாம்’, ‘டைட்டானிக்’, ‘காலம் புதிது’, ‘கெவி’, ‘சென்ட்ரல்’, ‘ஆக்நேயா’, ‘ஆக்கிரமிப்பு’, ‘யாதும் அறியான்’, ‘நாளை நமதே’ மற்றும் ‘ட்ரெண்டிங்’ ஆகிய படங்கள் ஜூலை 18-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளார்கள்.
இதில் இரண்டு படங்கள் வரை மட்டுமே மக்களிடையே தெரியும் வகையில் அமையும். மீதமுள்ள படங்கள் அனைத்துமே ஏதோ வெளியிட வேண்டுமே என்ற முனைப்பிலே வெளியிடுவதாக தெரிகிறது. ஏனென்றால் 11 படங்கள் வெளியீடு என்றால், அனைத்து படங்களுக்குமே சுமார் 70 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும்.
மேலும், ‘மார்கன்’ மற்றும் ‘3 பி.ஹெச்.கே’ ஆகிய படங்கள் இப்போதும் நல்ல வசூல் செய்து வருகிறது. அதற்கு பின் வெளியான அனைத்து படங்களுமே படுதோல்வியை தழுவிவிட்டன. இந்த வார படங்களின் நிலை என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.