லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது. இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு ஷூட் அவுட் ஆட்டம் போல அமைந்துள்ளது. ஏனெனில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களை எடுத்திருந்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 193 ரன்களை இந்தியா தற்போது சேஸ் செய்து வருகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 149 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 44 போட்டிகளில் இலக்கை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 53 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்த அணி தோல்வியை தழுவி உள்ளது. 51 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. லார்ட்ஸில் இந்திய அணி கடந்த 1986-ம் ஆண்டு 134 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு:
- இங்கிலாந்துக்கு எதிராக 342 ரன்களை மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடந்த 1984-ல் சேஸ் செய்தது.
- கடந்த 2004-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக 282 ரன்களை இலக்கை இங்கிலாந்து கடந்தது.
- அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 282 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்க அணி வெற்றிகரமாக சேஸ் செய்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
- கடந்த 2022-ல் 277 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி நியூஸிலாந்துக்கு எதிராக கடந்தது.
- கடந்த 1965-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக 216 ரன்களை இங்கிலாந்து எட்டியது.