மதுரை: அமித்ஷா அதிமுகவை கிள்ளுக்கீரையாக கருத்துகிறார் என மேலூரில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரை மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் நடத்திய போராட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்பது அவசியம் தான். ஆனால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் பாதிக்கப்பட்டோருக்கு பயன் தராது. திமுக அரசுக்கு எதிரான விமர்சனம் என்ற அடிப்படையில் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை சிலர் கையில் எடுக்கின்றனர். உண்மையிலேயே பாதிக்கப்படுவோர் பக்கம் நின்று தொடர்ந்து போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.
அதிமுக-பாஜக பொருந்தாக் கூட்டணி . கொள்கை அளவில் மட்டுமல்ல செயல் அளவிலும் கூட அவர்களால் இணக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட முடியாதபடி, அவர்களுக்குள் இடைவெளி இருக்கிறது. வெளியே நிற்கும் கட்சிகளை உள்ளே இழுக்க கூட்டணி ஆட்சி ஆசை காட்டுகிறார். அதிமுக தமிழகத்தில் வலுவான கட்சி, ஆண்ட கட்சி . ஆனால் அக்கட்சியின் விருப்பத்திற்கு மாறாக அமித்ஷா தனது விருப்பம் போல கருத்துகளை சொல்லி வருகிறார்.
அதிமுக முன்னணி தலைவர்கள் ஒன்றுகூடி அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக தரப்பில் இருந்து கூட்டணி ஆட்சி என அறிவித்தால் தான் அது அதிகாரபூர்வமானது. அமித்ஷா மட்டுமே சொல்லி கொண்டு இருப்பதால் அதிமுகவை அவர் ஒரு கிள்ளு கீரையாக கருதுகிறார் என்றே உணர முடியும். திமுக கூட்டணி உடையும் என எல். முருகன் கருத்து சொல்கிறார். அது அவருடைய ஆசையாக இருக்கலாம். அவர்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற தமிழ்நாடு இடம் கொடுக்காது” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.