சென்னை: ‘ப’வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்… முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் ‘ப’ வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை.
ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன. இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் – கற்பித்தல் என்பது கலந்துரையாடலாக அமையும் என்பவை சாதகமான அம்சங்கள்.
எனினும், பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது.
வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையை பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்; மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்… மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம். புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.