லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 3-6, 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜன்னிக் சின்னர், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.