சென்னை: கடலுார் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதிய சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் லெவல் கிராசிங் பகுதிகளில் ரயில்வே அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் ரயில்வே ‘கேட்’ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 9-ம் தேதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, அரக்கோணம் – செங்கல்பட்டு தடத்தில் ரயில்வே அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது, திருமால்பூர் அருகில் 40 மற்றும் 44 ரயில் கேட்டுகளில், இரவு பணியின்போது இரண்டு கேட் கீப்பர்கள், தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கேட் கீப்பர்கள் ஆஷிஸ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, லெவல் கிராசிங்கில் பணியாற்றும் கேட்கீப்பர்கள் மிகக் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றும், ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.