சென்னை: இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், கோட்ட அளவில் குரல் பதிவை சரிபார்க்குமாறும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த ரயில்வே கேட் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக, ரயில்வே லெவல் கிராசிங்-ல் பின்பற்ற வேண்டிய 11 நடைமுறைகளை இந்திய ரயில்வே துறை வெளியிட்டது. மேலும், 15 நாட்களுக்கு பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது, தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள திருமால்பூர் ரயில்வே கேட்டுகளில் அண்மையில் நடந்த ஆய்வின்போது, இரவுப் பணியில் தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர் கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், கோட்ட அளவில் குரல் பதிவை சரிபார்க்கவும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் நிலைய அதிகாரிக்கும், கேட்மேன்களுக்கும் இடையிலான உரையாடலை பதிவு செய்யவும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில்வே கோட்டங்களில் தினமும் லெவல் கிராசிங்குகளில் சோதனை நடத்த வேண்டும். இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங்குகள் பாதுகாப்பு விதிமுறைகளுடன் இயங்குகின்றனவா, குரல் பதிவு சரியாக இயங்குகிறதா என்று கண்காணிக்குமாறும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.