விழுப்புரம்: வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன ஆய்வுக்குப் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ராமதாஸ், “தைலாபுரத்தில் எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு நடைபெறுகிறது” என்றார்.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில், ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தவற்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 5 துப்பறியும் நிபுணர்கள் நேற்று வந்தனர். இக்குழுவினர் 3 மணி நேரம் ஒட்டுகேட்பு கருவியை ஆய்வு செய்தனர்.
பின்னர் ராமதாஸ் கூறும்போது, “என்னை சந்திக்க பாட்டாளி சொந்தங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் நான் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனது வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டுகேட்புக் கருவியை தனியார் நிறுவன துப்பறியும் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தைலாபுரத்துக்கு வந்து தாயை மகன் (அன்புமணி) சந்தித்துள்ளார். பாமக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான காலம் இன்னும் வரவில்லை” என்றார்.
சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்: பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மூத்த அரசியல் தலைவரான ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டது உண்மையெனில், அது கண்டிக்கத்தக்கது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், நோக்கம் என்ன என்ற விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே, சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரித்து, பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.