புதுடெல்லி: மகாராஷ்டிராவின் 11 மராட்டிய கோட்டைகளை, உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
உலகம் முழுவதும் பழங்கால கட்டிடங்களை ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்த 11 கோட்டைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்தம் 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்திருந்திருந்தது.
இந்நிலையில், பாரிஸ் நகரில் 47-வது உலக பாரம்பரிய சின்னம் தொடர்பான கமிட்டி கூடி, பல்வேறு நாடுகள் பரிந்துரைத்த சின்னங்கள் குறித்து ஆய்வு நடத்தின. முடிவில் இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்பை வெளிப்படுத்தும் 11 கோட்டைகள் மற்றும் தமிழகத்தின் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
மகாராஷ்டிராவில் மராட்டியர்கள் ஆட்சி காலத்தில் ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் பல இடங்களில் பாதுகாப்பான கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. அவை 17-ம் நூற்றாண்டில் இருந்து 19-ம் நூற்றாண்டு கால கட்டத்தில் மலை, கடலோரம், நிலம் என பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் மராட்டிய மன்னர்களின் ராணுவத் திறனை வெளிப்படுத்துகின்றன.
மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை பாதுகாக்கவும், வர்த்தக வழித்தடத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் இந்த கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் சால்ஹேர், ஷிவ்னேரி, லோஹகட், கான்தேரி, ராய்கட், ராஜ்கட், பிரதாப்கட், ஸ்வர்ணதுர்க், பன்ஹாலா, விஜயதுர்க், சிந்துதுர்க் ஆகிய கோட்டைகளை மராட்டியர்கள் கட்டியுள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டையும் தற்போது உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்தக் கோட்டையை சில காலம் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எதிரிகளின் படையெடுப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இயற்கையை பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனம், நீர் தேக்க அமைப்புகள், வலிமையான சுவர்கள் போன்றவற்றுடன் பலத்த பாதுகாப்புடன் மராட்டிய கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இவை எல்லாம் மராட்டியர்களின் ராணுவ திறமையை இன்றும் பறை சாற்றி வருகின்றன.
இதுகுறித்து யுனெஸ்கோ கூறுகையில், ‘‘2024-25-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் சேர்க்க இந்திய அதிகாரிகள் முழு முயற்சியுடன் ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இந்திய கோட்டைகளின் வரலாறு, கலாச்சார ஆதாரங்களை முன்வைத்தனர். அவற்றின் முக்கியத்துவத்தை சமர்ப்பித்தனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்த பிறகு இந்திய கோட்டைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் இந்தியாவின் கோட்டை பாரம்பரியத்துக்கு உலகளாவிய முக்கியத்துவத்தை அளிக்கிறது. அத்துடன், இந்த கோட்டைகளை தொடர்ந்து பாதுகாப்பதற்கு மதிப்பளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்கு இந்திய வரலாற்று ஆய்வாளர்கள், பாரம்பரிய நிபுணர்கள், அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். யுனெஸ்கோவின் முடிவு இந்திய சுற்றுலா துறைக்கு ஊக்கமளிக்கும். உள்ளூர் மக்களுக்கு பெருமை தேடித் தரும். அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க அந்தப் பகுதிகளை இன்னும் முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.