சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 11.48 லட்சம் பேர் பங்கேற்றனர். வினாத்தாள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 3,034 மையங்களில் நேற்று நடைபெற்றது.
தேர்வு எழுத மொத்தம் 13.90 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 11.48 லட்சம் (82.61%) பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2.42 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த 3 மாதங்களில் வெளியிடப்படும். இந்த ஆண்டு மொத்தம் 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 5 நடைபெற்றுள்ளன. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மதுரையில் வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் தவறானது. அனைத்து வினாத்தாள், விடைத்தாள்களும் காவல் துறையின் பாதுகாப்பு, கேமரா கண்காணிப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்படுவது இல்லை. அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக்கூடாது என வினாத்தாள் தயாரிக்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வை முடித்து வெளியே வந்தவர்கள், வினாத்தாள் கடினமாக இருந்தாக தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கணிதம் தவிர்த்து, பொது அறிவு, தமிழ் போன்ற பகுதிகள் கடினமாக இருந்தன. வழக்கமாக எளிதாக இருக்கும் தமிழ் பகுதியில் இந்த முறை 60 முதல் 70 சதவீத வினாக்கள் பாடப் புத்தகங்களுக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டன. பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த கேள்விகளாக, சற்று விரிவானதாக கேட்கப்பட்டதால், படித்து விடை எழுத அதிகநேரம் தேவைப்பட்டது. அதேநேரம், பொது ஆங்கிலத்தில் வினாத்தாள் எளிதாக இருக்கிறது. இந்த பாரபட்சத்தை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.
குரூப்-4 தேர்வில் நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி கிடைப்பது உறுதி. தற்போது 3,935 ஆக அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.