இணையத்தில் கடுமையான ட்ரோலுக்கு ஆளாகி இருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இணையத்தில் கிண்டலுக்கு ஆளானார் சாய் அபயங்கர். இதற்கான காரணம் என்னவென்றால், ‘இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை, அதற்குள் 8 படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமா? என்பதுதான்.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டூயூட்’, ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘பென்ஸ்’, ஷான் நிகாம் நடித்துள்ள ‘பல்டி’, சிம்பு நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 49’, அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் படம், சிவகார்த்திகேயன் – விநாயக் இணையும் படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் சாய் அபயங்கர். இதில் எந்தவொரு படமுமே இன்னும் வெளியாகவில்லை. இதனை முன்வைத்து தான் இணையத்தில் மீம்ஸ்களும், கிண்டல்களும் பறந்தன.
‘அவதார் 4’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘ராமாயணா’ படத்தில் ஹன்ஸ் சிம்மர் – ஏ.ஆர்.ரஹ்மான் இணையின் பணி சரியில்லை என்பதால் சாய் அபயங்கர் ஒப்பந்தம், கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ்கள் கொட்டி கிடக்கின்றன.
இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்னும் ஒரு படம் கூட வெளியாகாமல் அனைத்து பெரிய படங்களுக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி வருவதே இந்த ட்ரோலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சாய் அபயங்கர் இசையில் 8 படங்கள் உருவாகி வருவதாக மட்டுமே செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், உண்மையில் 14 படத்துக்கு சாய் அபயங்கர் பணிபுரிந்து வருவதாக கூறுகிறார்கள்.