திருச்சி: மதிமுகவுக்கு இத்தனை தொகுதிகள்தான் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில்தான் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திருச்சியில் செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, என்னை தனது சுவீகார புத்திரன் என்றார். அப்போது நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகளை என்றும் விட்டுக்கொடுத்தது இல்லை.
மதிமுகவுக்கு அங்கீகாரம் வழங்கியதே அதிமுகதான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எதிர்க்கட்சியான அதிமுகவினர் அப்படித்தான் பேசுவார்கள். பாஜக தமிழகத்தை கபளீகரம் செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, அந்த விழாவில் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்ச கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். மதிமுகவுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில் தான் பேச்சுவார்த்தையின்போது இதுபற்றி முடிவு செய்யப்படும். மல்லை சத்யா கடந்த 4 ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இல்லை. அவர் குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.