சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் நபார்டு வங்கி பிரபலமாகவில்லை. நபார்டு வங்கியின் சேவைகள் பழங்குடியின மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்று மத்திய நிதி துறை செயலர் நாகராஜு கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நபார்டு தலைவர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதித் துறை செயலர் எம்.நாகராஜு, தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நபார்டு துணை அலுவலகத்தை மத்திய நிதித் துறை செயலர் நாகராஜு திறந்து வைத்தார். மேலும், நபார்டுக்கான வாட்ஸ்-அப் சேனல், படித்த கிராமப்புற பெண்களுக்கான வருவாய் ஈட்டும் திட்டம், கிராமப்புறங்களில் தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்,து நபார்டு வங்கியின் சாதனை விளக்க புத்தகங்களை தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘நாட்டின் வளார்ச்சி, கிராமப்புற வளர்ச்சியில் நபார்டு வங்கியின் பங்கு மிகப் பெரியது. தமிழகத்தைப் பொறுத்தவரை 50 சதவீதம் நகர்புறம், 50 சதவீதம் கிராமப்புற பகுதிகளாக உள்ளன. 2030-ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம், 2047-ல் 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய தொழில் வளர்ச்சியுடன், விவசாயமும் வளர்ச்சி அடைய வேண்டும். நகர்ப்புற கட்டமைப்புகள் கிராமப்புறங்களிலும் இருக்க வேண்டும்’’ என்றார்.
மத்திய நிதித் துறை செயலர் நாகராஜு பேசியதாவது: சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்ததில் நபார்டின் பணி முதன்மையானது. உலகில் வேறு எந்த அமைப்பும் இதை செய்ததில்லை. ஆப்பிரிக்க, தென் அமெரிக்க, கிழக்கு ஆசிய நாடுகளில் நபார்டின் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நபார்டு சிறப்பாக பணியாற்றினாலும் சில சவால்கள் உள்ளன, குறிப்பாக, நிதிக்காக அரசை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. 44 ஆண்டுகளாக நபார்டு செயல்பட்டாலும், பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.
தென் மாநிலங்களில் நபார்டு சேவைகள் சிறப்பாக உள்ளன. ஆனால், வடகிழக்கு மாநிலங்கள், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் நபார்டு சரியாக சென்றடையவில்லை. வடக்கிழக்கு மாநில மக்களுக்கு நபார்டு திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.