திருவனந்தபுரம்: பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவின் புதிய தலைமை அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். பின்னர், பாஜக நிர்வாகிகள், வார்டு தலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாஜக தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். நாம் நூற்றுக்கணக்கான தியாகிகளை இழந்துவிட்டோம். நமது கட்சியை ஆட்சியில் அமர்த்துவதுதான் நமது நோக்கம். வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக 21,000 வார்டுகளில் போட்டியிடும். 25 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, பெரும்பாலான வார்டுகளில் பாஜக வெற்றி பெறும்.
பாஜகவை வடநாட்டு கட்சி என காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றி நாம் ஆட்சி அமைத்துள்ளோம். மக்களவை தேர்தலில் தெலங்கானாவில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளோம். அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றியை பெறுவோம். அந்த வகையில், மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கேரள மக்கள் 11 சதவீத ஓட்டுகளை வழங்கினர். 2019-ம் ஆண்டில் 16 சதவீத ஓட்டுகளையும், 2024-ம் ஆண்டில் 20 சதவீத ஓட்டுகளையும் வழங்கியுள்ளனர். பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பாஜக ஆட்சி அமைக்கும் தருணம் வந்துவிட்டது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாம் ஆட்சி அமைக்கப்போகிறோம்.
தீவிரவாதம் எந்த வகையில் இருந்தாலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 2026 மார்ச் மாதத்துக்குள், நக்சல் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பிரதமர் பதிலடி கொடுத்தார். சமீபத்தில் கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை தொடங்கி வைத்தோம். வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்குவார். கேரளாவில் இடது ஜனநாயகமுன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். கடந்த 2020-ல் நடந்த தங்க கடத்தல் ஊழல் கேரளாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல். ஐக்கிய ஜனநாயக ஆட்சியில் தான் மதுபான விடுதி ஊழல், சோலார் பேனல் ஊழல் வழக்குகள் எல்லாம் வெளியே வந்தன.
ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு மீது எதிர்க்கட்சிகளால் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட சுமத்த முடியவில்லை. இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் கேரளாவை வன்முறை, ஊழலின் மையமாக மாற்றிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.