சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படங்களின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘மதராஸி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருந்தார். இதனை ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்குவதாக இருந்தது. தற்போது இதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.
அடுத்ததாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் விநாயக் கதையில் அப்பா கதாபாத்திரத்துக்கு மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போதைக்கு மோகன்லால் தேதிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மோகன்லால் தேதிகளை கணக்கில் கொண்டு, அடுத்து வெங்கட்பிரபு கதையில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது