ஜூன் 27-ம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியான படம் ‘கண்ணப்பா’. இப்படம் குறித்து வெளியீட்டு முன்பு பல்வேறு கிண்டல்கள் எழுந்தன. ஆனால், பட வெளியீட்டுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இதனை வைத்து படக்குழுவினர் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமங்களை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தற்போது சிவபக்தர்கள் மற்றும் சுவாமிஜிக்கள் உள்ளிட்ட சிலரை ஒருங்கிணைத்து ‘கண்ணப்பா’ திரையிட்டுக் காட்டப்பட்டது. இதில் மோகன்பாபுவும் கலந்துக் கொண்டார். இந்தக் காட்சி முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் மோகன்பாபு பேசினார். அப்போது “நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் மீம்ஸ்கள், கிண்டல்களுக்கு ஆளானதே” என்று மோகன்பாபுவிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு மோகன்பாபு, “இங்கு படம் பார்த்த சுவாமிஜி ஒருவர் கிண்டல்கள் தொடர்பாக ஒரு அழகான பார்வையை என்னிடம் தெரிவித்தார். கிண்டல்கள் பற்றி கவலைப்படாதீர்கள் என்றார். இந்த ஜென்மத்திலும், கடந்த கால ஜென்மத்திலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களைக் கிண்டல்கள் கழுவ உதவுவதாக தெரிவித்தார். கிண்டல் செய்பவர்களுக்கு நன்றி சொல்லவும் என்னிடம் அறிவுறித்தினார்” என்று பதிலளித்துள்ளார்.
‘மகாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கிய படம் ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்திருந்தார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்திருந்தனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் என பலர் நடித்திருந்தனர். இப்பட வெளியீட்டுக்குப் பிறகு படத்தை அநாகரிகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரித்தும் ட்ரோலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.