மும்பை: பயனர்களுக்கு சலுகை விலையில் ஃபேன்சி மொபைல் நம்பர்களை தேர்வு செய்யும் வாய்ப்பை தற்போது அறிமுகம் செய்துள்ளது ஜியோ டெலிகாம் நிறுவனம்.
இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கடந்த 2016-ல் தான் இந்த நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டெலிகாம் சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. அதற்கு காரணம், அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால ரீசார்ஜ் திட்டங்கள். இப்போதும் மற்ற தனியார் நிறுவனங்களை ஒப்பிடும்போது ஜியோவின் ரீசார்ஜ் கட்டணம் சற்று குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சலுகை விலையில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த மொபைல் எண்களை தேர்வு செய்யும் வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இதற்கான கட்டணம் ரூ.500 என நிலையில், அது தற்போது ரூ.50 என அதிரடியாக சலுகை விலையில் பயனர்களுக்கு ஜியோ வழங்குகிறது. பயனர்கள் தற்போது பயன்படுத்தி வரும் மொபைல் எண், பிறந்த நாள், வாகன பதிவு எண் அல்லது தங்களுக்கு பிடித்த அதிர்ஷ்ட எண்ணை தேர்வு செய்யலாம். இதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.
பயனர்கள் தங்கள் ஜியோ எண் உடன் வேறு டெலிகாம் ஆப்பரேட்டர் எண்ணை கூட ஒப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஜியோ செயலி மூலம் தேர்வு செய்து, அந்த சிம் கார்டை வீட்டுக்கே டெலிவரி பெறலாம் என ஜியோ கூறியுள்ளது. இது ப்ரீபெய்டு பிளானில் ஆக்டிவேட் செய்யப்படும் என ஜியோ கூறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு ‘மை ஜியோ ஆப்’ அல்லது ஜியோ வலைதளத்தை பயனர்கள் அணுகலாம்.