சென்னை: அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதியின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப் பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக புகார் எழுந்துள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து கல்வி பயில்வதை பார்க்கும் போது ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அடிப்படை வசதிகள் தொடங்கி ஆசிரியர்கள் பற்றாக்குறை வரை அரசுப் பள்ளிகளில் நிலவும் அவல நிலையில் மாணவர்கள் ஒருபுறம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என பள்ளிக் கல்வித்துறை விளம்பரம் செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
எனவே, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அரசுப்பள்ளிகளின் உண்மை நிலையை அறிந்து, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.