சென்னை: யூடியூப் வீடியோ தளத்தின் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் சில அப்டேட்கள் அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக உண்மைத்தன்மை இல்லாத ஸ்பேம் கன்டென்ட், மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் ஒரே கன்டென்ட்கள் அடையாளம் காணப்படும் எனத் தெரிகிறது. இதனால் யூடியூப் தளத்தில் பதிவிடும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு மானிடைசேஷன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் புது சிக்கல் எழுந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்தான் யூடியூப். உலகளவில் 200 கோடிக்கும் மேலான மக்கள் இந்த சேவையை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்க முடியும். யூடியூப் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவு செய்யும் வீடியோக்களுக்கு அதன் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கை யூடியூப் பகிர்ந்து வருகிறது. யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த நிலையில்தான் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் புதிய அப்டேட் அறிமுகமாகி உள்ளது.
யூடியூப் பார்ட்னர் புரோகிராம்? – யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் யூடியூப் பயனர் ஒருவர் இணைவதற்கு சில தகுதிகள் அவசியம். 500 சப்ஸ்கிரைபர்களை பயனர் ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை 1,000 சப்ஸ்கிரைபர்களை கடந்ததும் விளம்பர வருவாய் ஈட்டுவதற்கான தகுதியை பெற முடியும். இதன் மூலம் தங்கள் வீடியோக்களுக்கு இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் கன்டென்ட் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்ட முடியும். ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கும் கிரியேட்டர்களுக்கு வருவாய் வழங்குகிறது யூடியூப்.
பிராந்திய ரீதியாகவும் யூடியூப் வீடியோக்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான தகுதிகள் மாறுபடும். வீடியோக்கள் மூலம் வருவாய் ஈட்டும் இந்த மானிடைசேஷன் தான் கிரியேட்டர்களுக்கு முக்கிய வருவாயாக விளங்குகிறது. இதற்காகவே கிரியேட்டர்களில் சிலர் மெனக்கெட்டு அசல் கன்டென்ட்களை பகிர்வது உண்டு. கடந்த 2021 முதல் 2023 வரையில் உலக அளவில் சுமார் 70 பில்லியன் டாலர்களை யூடியூப் பகிர்ந்துள்ளது. சில நேரங்களில் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை காரணம் காட்டி பயனர்களுக்கு யூடியூப் தரப்பில் வருவாய் பகிரப்படுவது இல்லை. இது கிரியேட்டர்களுக்கு சற்று அதிருப்தி தரும் விஷயமாக உள்ளது.
முதலில் யூடியூப் வருவாய் பகிர்வு விவகாரத்தில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்தது. குறிப்பாக, சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை, வாட்ச்-ஹவர் போன்ற எண்ணிக்கைகள் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்தது. இதன் மூலம் வைரல் கன்டென்ட்களை பதிவு செய்பவர்கள் வருவாய் ஈட்டினர். பின்னர் 2018-ல் 1,000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் குறிப்பிட்ட மணி நேரம் வாட்ச் டைம் போன்றவை அவசியமானது. இது அதிக பார்வையாளர்களை கொண்டுள்ள கன்டென்ட்களை பதிவு செய்யும் யூடியூப் சேனல்களுக்கு சாதகமாக அமைந்தது.
பின்னர் படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அசல் தன்மை இல்லாத கன்டென்ட்கள், டெக்ஸ்ட்டில் இருந்து ஜெனரேட் செய்யப்பட்ட வாய்ஸ் கன்டென்ட்கள், ரோபோட்டிக் பயன்பாடு போன்றவற்றை கொண்டு உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் 2025-ல் புதிய மாற்றங்களை யூடியூப் கொண்டு வந்துள்ளது.
தற்போது வந்துள்ள புதிய மாற்றங்கள் என்ன? – யூடியூப் தளத்தில் ஸ்பேம் கன்டென்ட்களை அடையாளம் காணும் வகையில் இந்த புதிய அப்டேட் அறிமுகம் ஆகிறது. இதை யூடியூப் தரப்பும் தெளிவுப்படுத்தி உள்ளது. எந்த வகையிலான கன்டென்டுக்கு மானிடைசேஷன் இல்லை என்பதை யூடியூப் இன்னும் விளக்கவில்லை. இருப்பினும், இது ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்படும் வீடியோக்கள், ஸ்பேம் கன்டென்ட், மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் ஒரே கன்டென்ட்கள் போன்றவற்றை டார்க்கெட் செய்வதாக கிரியேட்டர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஜெனரேட்டிவ் ஏஐ கன்டென்ட்களை வீடியோக்களை யூடியூப் தடை செய்கிறதா என்ற கேள்வியும் கிரியேட்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்படும் வாய்ஸ் ஓவர், விஷுவல் போன்ற கன்டென்ட் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பை கிரியேட்டர்களுக்கு வழங்குவதால் காப்புரிமை மற்றும் சட்ட ரீதியிலான சிக்கலாக பார்க்கப்படுகிறது. இதனால் கூட யூடியூபின் இந்த புதிய அப்டேட்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கலாம் என கிரியேட்டர்கள் சிலர் கருதுகின்றனர்.
யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் வருவாய் ஈட்ட கிரியேட்டர்கள் அசல் கன்டென்டுகளை பகிர வேண்டும் என யூடியூப் குறிப்பிட்டுள்ளது. மேலும், மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் கன்டென்ட்கள் அடையாளம் காணப்படும் என புதிய அப்டேட்டில் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் எப்படி என்பதை அறிய பயனர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டி உள்ளது.
மறுபக்கம், அசல் கன்டென்ட் வீடியோக்களை பகிரும் கிரியேட்டர்களுக்கு எந்தவித தாக்கமும் இல்லை. ஆனால், ஏஐ துணையோடு குறைந்த தரத்திலான வீடியோவை உருவாக்கி அதிக சப்ஸ்கிரைபர்கள் மற்றும் வியூஸ்களை கொண்டு மானிடைசேஷன் ஆதாயம் பெறுகின்ற கிரியேட்டர்கள் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான கண்காணிப்பை இந்த புதிய அப்டேட் மூலம் யூடியூப் மேற்கொள்ளும்.
மொத்தத்தில், கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்கள் மூலம் பார்வையாளர்களுக்கு கன்டென்ட்டை தனித்துவமாகவும், ஈர்க்கும் வகையிலும் அசல் தன்மையுடன் வழங்க வேண்டும் என யூடியூப் விரும்புகிறது. மேலும், இதன்மூலம் தளத்தின் கன்டென்ட் தரம் மேம்படும். மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் வீடியோக்கள், ஸ்பேம் வீடியோக்களை ஃபில்டர் செய்வதனால் பயனர்கள் தங்கள் தளத்தில் நீண்ட நேரம் செலவிடுவதையும், அதன் மூலம் விளம்பர வருவாயை ஈட்டலாம் என்பதும் யூடியூபின் திட்டமாக உள்ளது. இந்த புதிய அப்டேட்கள் ஜூலை 15-ம் தேதி முதல் அமலாகிறது.