புதுடெல்லி: வெளிநாடுகளின் நாடாளுமன்றங்களில் காங்கிரஸ் பிரதமர்களுக்கு இணையாக பிரதமர் நரேந்திர மோடி 17 உரைகளை ஆற்றியுள்ளார். இதற்காக தனது எக்ஸ் தளத்தில் பாஜக பெருமிதம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் ஐந்து நாடுகளுக்கு விஜயம் செய்து, கானா, டிரினிடாட்&டொபாகோ மற்றும் நமீபியா நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். கடைசியாக நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, அந்நாட்டு எம்பிக்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இது, பிரதமர் மோடி வெளிநாட்டு எம்.பிக்கள் இடையே ஆற்றிய 17-வது உரை. இதன் சிறப்பு என்னவெனில், இது அவருக்கு முன் இருந்த அனைத்து காங்கிரஸ் பிரதமர்களின் மொத்த உரைகளுக்கும் சமமானது. இதை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பாஜக தலைமை, பிரதமர் மோடி மீது பெருமிதம் தெரிவித்தது.
இது குறித்து பாஜகவின் எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் மோடி வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் இதுவரை 17 உரைகளை நிகழ்த்தியுள்ளார். இது பல தசாப்தங்களாக காங்கிரஸ் பிரதமர்கள் அனைவரும் ஆற்றிய உரைகளுக்கு சமம். காங்கிரஸ் பிரதமர்கள் பல தலைமுறைகளாக ஆற்றியதை அவர் ஒரே தசாப்தத்தில் சாதித்துள்ளார். இது உலகளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக அவரது நற்பெயரை உறுதிப்படுத்துகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு முன்பாக அப்பதவியிலிருந்த காங்கிரஸ் பிரதமர்கள் ஆற்றிய உரைகளின் எண்ணிக்கையும் அப்பதிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜவஹர்லால் நேரு (3), இந்திரா காந்தி (4), ராஜீவ் காந்தி (2), நரசிம்ம ராவ் (1) மற்றும் மன்மோகன் சிங் (7) என இவர்கள் மொத்தம் 17 உரைகளை நிகழ்த்தியுள்ளனர்.
அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு முறை வெளிநாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். ஜனதாவின் பிரதமரான மொரார்ஜி தேசாய் ஒரே ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். பிரதமர் மோடி 2014-ல் ஆஸ்திரேலியா, பிஜி, பூட்டான் மற்றும் நேபாள நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். 2015 -ல் மொரீஷியஸ், மங்கோலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை நாடாளுமன்றங்களில் உரையாற்றினார். 2016-ல் அவர் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்திலும், 2023 இல் அதே நாட்டிலும் மீண்டும் உரையாற்றினார்.
உகண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, 2018-ல் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து 2019-ல் மாலத்தீவு, 2024-ல் கயானா, இந்த ஆண்டு, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் நமீபியா நாடாளுமன்றங்களில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி உள்ளார்.
காங்கிரஸ் விமர்சனம்: பாஜகவின் பெருமிதத்தை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், செய்தி தொடர்புப் பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், ’இந்தியா தனது சூப்பர் பிரீமியம், அடிக்கடி பறக்கும் பிரதமரை வரவேற்கிறது. அவர் மூன்று வாரங்களுக்கு நாட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், மீண்டும் விமானத்தில் பயணம் செய்வார்.
இப்போது அவர் இங்கு இருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அவருக்காகக் காத்திருந்த மணிப்பூரைப் பார்வையிட அவருக்கு நேரம் கிடைக்கும். பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படாததற்கான காரணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். அவரது சொந்த மாநிலத்தில் உள்கட்டமைப்பு சரிவுகளைப் பற்றி சிந்தியுங்கள்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவி வழங்குங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்