சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
ராமதாஸ் தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர். அவரது இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்பு குறைபாடு நிலவுவதைத் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் அவரை நேசிக்கும் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன? ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எந்த நோக்கத்திற்காக அந்தக் கருவி பொருத்தப்பட்டது? என்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாட்டாளிகளுக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்; ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டது உண்மை என தெரிய வந்தால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்