புதுடெல்லி: விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம் என்று சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் – இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில், “விமானத்தின் 2 இன்ஜின்களுக்கும் எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் உள்ளன. அந்த சுவிட்சுகள் ‘ரன்’ என்ற நிலையில் இருந்தால், எரிபொருள் சென்று கொண்டிருக்கும். ‘கட் ஆஃப்’ நிலையில் இருந்தால் என்ஜினுக்கு எரிபொருள் செல்லாது. விமானம் புறப்படத் தொடங்கிய உடன் திடீரென ஒரு நொடிக்குள் ‘ரன்’ என்ற நிலையில் இருந்து ‘கட் ஆஃப்’ என்ற நிலைக்கு சுவிட்சுகள் மாறி உள்ளன. இதனால், என்ஜினுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
எனினும், எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் எவ்வாறு ‘ரன்’ என்ற நிலையில் இருந்து கட் ஆஃப் நிலைக்கு மாறின என்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, இந்திய விமான விமானிகள் சங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “விமானிகள்தான் குற்றவாளிகள் என்பதாக ஊகித்து விசாரணை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே செல்கிறது. இந்த முக்கியமான விசாரணைக்கு தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும்.” என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விகாரங்கள் தொடர்பாக விசாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “விசாரணை அறிக்கையில் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமே உள்ளன. இவ்விஷயத்தில் அவசரப்பட்டு நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. விசாரணைக் குழு பாராட்டுக்குரிய வகையில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முதிர்ச்சியானதாகவும் வெளிப்படையானதாகவும் உள்ளது.
விசாரணைக் குழுவுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் ஒருங்கிணைத்து வழங்கி வருகிறோம். இறுதி அறிக்கை விரைவில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது, விபத்து தொடர்பாக சில முடிவுகளுக்கு எங்களால் வர முடியும். விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களைப் பொறுத்தவரை, உலகின் சிறந்த விமானிகளும் விமானப் பணியாளர்களும் எங்களிடம் இருப்பதாக நான் உண்மையாகவே நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணை அறிக்கையை அறிய…