ஏனாம் பகுதியில் ரூ. 18 ஆயிரத்துக்கு விற்ற புலாசா மீன் புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் ஆந்திரம் அருகே கோதாவரி ஆற்றங்கரை பகுதியை ஒட்டி உள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திரத்தில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனாம் அருகேயுள்ள தவளேஸ்வரம் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏனாம் வழியாக செல்லும் கோதாவரி ஆற்றில் 1.5 லட்சம் கனஅடி நீர் செல்கிறது. இந்நிலையில் மீனவர் ஒருவரின் வலையில் புலாசா மீன் கிடைத்தது. ‘மீன்களின் ராஜா’ என்று அழைக்கப்படும் இந்த மீன் ஆந்திரத்தில் விரும்பி உண்ணப்படுகிறது.
அதிக சுவையும், புரத சத்தும் நிறைந்த இந்த மீனை ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்பட்டது. பொன்னமண்டரத்தினம் என்பவர்ரூ. 15 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து, ரூ. 18 ஆயிரத்துக்கு விற்றதாக தெரிவித்தார். தற்போது வெள்ளத்தில் அதிகளவில் புலாசா மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.