சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரியவந்துள்ளது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், “நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், நவீன் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரிகிறது.
காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில், தங்கள் நிறுவன நிதிப்பிரிவின் கருவூல மேலாளரான நவீன் பொலினேனி சுமார் ரூ.44 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்தார். அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு பட்டியலை சமர்ப்பிக்க அறிவுறுத்தினோம். அந்தப் புகார் மனு விசாரணை நிலையிலேயே உள்ளது.
ரூ.44 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாண்டியராஜனுக்கு நான் தான் விடுப்பு கொடுத்து அனுப்பினேன்” என்றார்.
நடந்தது என்ன? – திருமலா பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் விவகாரத்தில் சிக்கிய மேலாளர் நவீன் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி(37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை, நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீஸாரிடம் நவீன் கெஞ்சி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடமாகக் கிடந்தார். தகவல் அறிந்து புழல் போலீஸார் சம்பவ இடம் சென்று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸாரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நவீனின் குடும்பத்தினர் கூறும்போது, “நேற்று முன்தினம் நவீனை பார்க்க அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் வந்தனர். பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் மட்டும் சும்மா விட்டுவிடுவோம் என நினைக்க வேண்டாம். உன்னை எப்படியும் சிறையில் தள்ளி விடுவோம் என்று மிரட்டினர். அதேபோல், போலீஸாரும் கடும் நெருக்கடி கொடுத்ததால் நவீன் இந்த முடிவை எடுத்திருக்கலாம்’’ என குற்றம்சாட்டினர்.