கோவை: கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், ‘அக்ரி இன்டெக்ஸ் 2025’ விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 14-ம் தேத வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர், நவீன ட்ரோன் கருவி, சூரிய ஒளி பம்புகள், நுண் நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் தொடர்பான கருவிகள், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், குறைந்த நீர் பயன்பாட்டு விவசாய முறைகள், மதிப்பு கூட்டுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள், மதிப்புக்கூட்டுப் பொருட்கள், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், வேளாண் சந்தை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாசனக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, எடைக்கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். இதில், அமைக்கப்பட்டுள்ள மின்சார டிராக்டர் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அதாவது, கார், வேன் உள்ளிட்டவற்றில் பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் பயன்படுத்தி இயக்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் விவசாயிகள் பெரி்தும் பயன்படுத்தும் டிராக்டர்களும் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முத்தப்பா குழுமத்தின் சார்பில், மான்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் இந்த டிராக்டர் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் டிராக்டர் பிரிவுக்கான தலைமை செயலாக்க அதிகாரி ஹரிச்சந்திர பிரசாத் கூறும்போது, ‘‘மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த இ-27 டிராக்டர் தூய்மையான, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற வாகனமாகும். அதிக இழுவிசையை வழங்கும் இந்த டிராக்டர், மாறுபட்ட பல்வேறு தன்மைகளை கொண்ட விவசாய நிலங்களில் பயன்படுத்தலாம்.
இதன் பராமரிப்பு செலவு குறைவாகும். இதன் ஆற்றல் திறன் 27 ஹெச்பி ஆகும். ஒரு முறை மின்சார சார்ஜ் ஏற்றினால் 5 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். 72 வாட்ஸ் இதன் சார்ஜிங் வோல்டேஜ் ஆக உள்ளது. 720 கிலோ வரை ஹைட்ராலிக்ஸ் உயர்த்தும் திறன் கொண்டது என்பது இதில் முக்கியமானதாகும். விவசாய நிலங்களுக்கு தேவையான உபகரணங்களை பொருத்த இதைப் பயன்படுத்தலாம்.
8 முன்பக்க கியர்கள், 2 பின்பக்ககியர்கள் இந்த டிராக்டரில் உள்ளன. மிகக்குறைவான அதிர்வு, சத்தமில்லாத இயக்கம் இதன் முக்கிய அம்சமாகும். தமிழ்நாடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்களிலேயே இந்த டிராக்டர் கிடைக்கிறது. விவசாயிகள் பயன்படுத்துவதற்கு இந்த டிராக்டர் எளிதாக இருக்கும்,’’என்றார். மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த டிராக்டரை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு விலை, பயன்பாடு விவரங்களை விசாரித்துச் சென்றனர்.
அதேபோல், இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சாதாரண டிராக்டர்கள், அதனுடன் இணைக்கப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும் விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு விசாரித்துச் சென்றனர்.