சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை என பாமக நிறுவனர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப்போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருவதாகவும், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய திறன் மேம்பாட்டுத் திட்டம் மாணவர்களால் விரும்பப்படாத திட்டமாக மாறி வருவதற்கு அரசின் பொறுப்பின்மை தான் காரணமாகும். தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற உதவி செய்யும் திட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 35,137 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 11,865 ஆக குறைந்து விட்டதாக தமிழக அரசே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிப்பதில் உள்ள குறைகள் தான்.
2023 ஆம் ஆண்டில் திறன் பயிற்சி திட்டத்தில் சேர்ந்த 1.35 லட்சம் மாணவர்களில் பாதிக்கும் குறைவாக வெறும் 66,537 பேருக்கு மட்டும் தான் வேலைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 68,600 பேருக்கு வேலைகள் கிடைக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சம் குறைந்து 36,584 ஆக வீழ்ச்சியடைந்து விட்டது.
அவர்களிலும் வெறும் 8517 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன் விளைவாகத் தான் நடப்பாண்டில் இத்திட்டத்தில் வெறும் 11,865 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களிலும் 796 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது. புரட்சிகரமான திட்டம் என்று அரசால் கொண்டாடப்பட்டு தொடங்கப்படும் ஒரு திட்டத்தில் பயனடைவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும்.
ஆனால், முதல் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களை விட இரண்டாம் ஆண்டில் ஒரு லட்சம் பேர் (74%) குறைவாகத் தான் சேர்ந்துள்ளனர். இரண்டாம் ஆண்டு சேர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள் தான் மூன்றாம் ஆண்டில் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். அதுமட்டுமின்றி, திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் விகிதமும் குறைந்து வருகிறது.
2023 ஆம் ஆண்டில் பயிற்சி பெற்றவர்களில் 49 விழுக்காட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 23.33% ஆகவும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 6.76% ஆகவும் குறைந்து விட்டன. இன்றைய தேதியில் கூட 5000 பேர் பயிற்சி பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் 1000 பேர் கூட பயிற்சிக்கு வருவதில்லை. நான் முதல்வன் திட்டம் படுதோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபிக்க இந்த புள்ளி விவரங்களே போதுமானவை. இவற்றை தமிழக அரசால் கூட மறுக்க முடியாது.
அடிப்படையில் திறன் பயிற்சி அளித்து, படித்த இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றும் திட்டங்கள் சிறப்பானவை. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவையானவை. நான் முதல்வன் திட்டமும் அத்தகைய திட்டம் தான். ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைபெறும் முறைகேடுகளும், குளறுபடிகளும் தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தோல்விக்கு காரணங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டாக, படித்த இளைஞர்களுக்கு தையல் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். ஆனால், அந்த நிறுவனத்தில் வெறும் 2 தையல் எந்திரங்கள் மட்டுமே இருந்ததாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளே கூறியிருக்கின்றனர்.
வெறும் 2 எந்திரங்களை வைத்துக் கொண்டு எவ்வாறு நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்? அவ்வாறு பயிற்சி அளித்தாலும் அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? இதேபோல் இன்னும் பல உதாரணங்களைக் காட்ட முடியும். இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளும்கட்சியின் ஆதரவு பெற்ற பயிற்சி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகளே இல்லாவிட்டாலும் அவற்றுக்கு பயிற்சிக்கான ஒப்பந்தம் வாரி வழங்கப்படுவது தான்.
திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவ்வாறு பணியில் சேர்ந்தவர்களும் அதில் நீடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை. நான் முதல்வன் திட்டத்தின்படி பணியில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.500 என்ற விகிதத்தில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
பணியில் சேருபவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி தான் இந்தப் பணியை செய்ய வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால், அவர்கள் வேலையை உதறுகின்றனர்.
எந்த வகையில் பார்த்தாலும் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டம் வெற்றிகரமானதாக இல்லை. இன்றைய தேவைக்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்படாததும், மிகக் குறைந்த ஊதியத்தில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவதும் தான் இதற்கு காரணமாகும். நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை.
அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் கனவுத் திட்டமாக உருவாக்கி இளைஞர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்துவோம் என உறுதியளிக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.