புதுப் புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தக் கூடிய கதையாக ‘வேள்பாரி’ இருக்கும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.
சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது: “முதலில் எனது கனவுப் படமாக இருந்தது ‘எந்திரன்’. தற்போது என்னுடைய கனவுப் படம் ‘வேள்பாரி’. எப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தை எடுக்கிறோமோ அதை ‘சந்திரலேகா’ போல பிரம்மாண்டமாக இருப்பதாக சொல்வார்கள். ஆனால் ‘சந்திரலேகா’வை விட ஒரு படிமேலாக ‘வேள்பாரி’ வரும் என்று நம்புகிறேன்.
இப்படத்தில் ஆக்ஷன், இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், பாடல் வரிகள், வசனம், கிராபிக்ஸ் என நிறைய ஸ்கோப் இருக்கிறது. மேலும் புதுப் புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தக் கூடிய கதையாக ‘வேள்பாரி’ இருக்கும்.
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘அவதார்’ போல உலகம் போற்றக்கூடிய அறிவுப்பூர்வமான, ஜனரஞ்சகமான, காவியமாக ஒரு பெருமைமிக்க தமிழ் படைப்பாக உருவாகக் கூடிய சாத்தியம் இதில் உள்ளது. என் கனவு நனவாகும் என்று நம்புகிறேன்” என்றார் ஷங்கர் தெரிவித்தார்.