இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்து சேரும் ஈழத் தமிழர்கள் அங்குள்ள ஏதிலிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த நேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை நடக்கிறது. குற்றவாளிகள் என அடையாளம் காணப்படும் சிவராசன், சுபா ஆகியோரைத் தேடத் தொடங்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, ஏதிலிகள் பலரை, வேலூர் கோட்டை தடுப்புக் காவல் சிறையில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரால் துன்புறுத்துகிறது.
அப்படி அங்கு அழைத்துச் செல்லப்பட்ட மாறன் (சசிகுமார்), ராமேஸ்வரம் முகாமில் இருக்கும் தனது மனைவி (லிஜோ மோள்) மற்றும் மகளைப் பார்க்க முடியாமல் சித்ரவதைகளை அனுபவிக்கிறார். ஆண்டுகள் நகர, மாறனும் அவருடன் வேலூர் முகாமில் இருப்பவர்களும் சுரங்கம் தோண்டித் தப்பிக்கத் திட்டமிடுகின்றனர். அவர்களால் முடிந்ததா என்பது கதை.
கடந்த 1995, ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று வேலூர் தடுப்புக் காவல் சிறையிலிருந்து 45 பேர் தப்பிச்சென்ற நிகழ்வைக் கதைக்களமாக்கி, தேவையான அளவுக்குக் கற்பனைச் சித்தரிப்புகளையும் புகுத்தி, த்ரில்லர் படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.
நிறைமாதக் கர்ப்பிணியாக ராமேஸ்வரத்துக்கு அனுப்பப்பட்ட மனைவியுடன் போய்ச் சேர்ந்துவிடுவது என, 8 மாதங்கள் கழித்து வந்து சேரும் மாறன், எதனால், எவ்வாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சந்தேக வளையத்துக்குள் சிக்குகிறார் என்கிற பின்கதை உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எப்படியெல்லாம் சித்ரவதைச் செய்யப்பட்டார்கள், உடல், மன ரீதியாக அவர்கள் அனுபவித்த கொடுமைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சித்தரித்த விதம் உலுக்கிவிடும்.
தடுப்புக் காவலிலிருந்து தப்பிப்பதுதான் திரைக்கதையின் முக்கிய நிகழ்வு எனும்போது, முதல் பாதியில் வரும் ராஜீவ் படுகொலை நிகழ்வின் சித்தரிப்பை குரல் மற்றும் புகைப்படங்களின் பதிவாகக் கடந்து சென்றிருக்கலாம். இரண்டாம் பாதியில் சுரங்கம் தோண்டும் காட்சிகள், தப்பிக்கும் காட்சிகளில் கூடியிருக்க வேண்டிய சுவாரஸ்யத்தை முதல் பாதியின் தேவையற்ற சுமைகள் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.
மாறனாக ஈழத்தமிழ் பேசி நடித்திருக்கும் சசிகுமார், அவரது மனைவியாக வரும் லிஜோமோள், வாய்பேச முடியாத ஓவியனாக வரும் மணிகண்டன், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்கள். ஆனால், ஏதிலிகளின் வழக்கறிஞராக வரும் மாளவிகா அவினாஷுக்கு புத்திசாலித்தனமாகப் பல காட்சிகளைச் சேர்த்திருந்தால் திரைக்கதை இன்னும் சூடுபிடித்திருக்கும்.
திரைக்கதையில் இருக்கும் குறைகளைக் கடந்து, சொல்லப்பட வேண்டிய ஒரு சாகசக் கதையை மிகை உணர்ச்சி த்ரில்லர் நாடகமாகச் சொல்லி இருக்கிறது இந்த ‘பிரீடம்’.