திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், 10, 12 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசியலில் தவறு நடப்பது இயல்புதான். செய்த தவறை (அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் மதிமுக வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை. அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்ஜிஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப்படுத்தி பேசவில்லை.
மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார். திமுகவில் தற்போது சேர்க்கப்பட்டவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். மேலும் 11 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். மதிமுகவுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம்.
அதற்கு குறைந்தபட்சம் 10, 12 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதியில் வெற்றி பெற்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும். இதுதான் எங்களது கட்சியினர் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் உடனிருந்தனர்.