சென்னை: ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரவேண்டும்’ என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
பழனிசாமி தரப்பு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி 2 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளில் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பு: இந்த விவகாரத்தில் 6 புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
நீதிபதிகள்: அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் தங்கள் அரசியல் சாசன கடமையை செய்ய தவறுகிறார்கள் அல்லவா? இதில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவது போல தெரிகிறது. குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் குடியரசு தலைவரைவிட உயர்ந்ததா?
தேர்தல் ஆணையம் தரப்பு: அரசியல் சாசனத்தில் உயர்ந்த அதிகாரி, தாழ்ந்த அதிகாரி என்று யாரும் இல்லை. அனைவரும் சமமானவர்களே. இந்த விவகாரத்தில் எப்போது முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகளை கேட்டு தெரிவிக்கிறோம். இவ்வாறு வாதம் நடந்தது. இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பானபுகார்கள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டுஎழுத்துப்பூர்வமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஜூலை 21-க்குள் தாக்கல்செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.