சென்னை: காதலியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமார் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணும் மனுதாரரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அப்பெண் ணுக்கு 40 வயதுடைய உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நெருக்கமாக இருந்துள்ளனர். சம்பவம் நடந்த போது கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த அந்த பெண்ணுக் கு, 18 வயது நிரம்பி விட்டது. எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் பெண் 18 வயது பூர்த்தியடையாதவராக இருக்க முடியாது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், சிறுமி என சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, மதன் குமார் விடுதலை செய்யப்படுகிறார்“ என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.