சென்னை: நொளம்பூர் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் சேவை மையத்தை பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பதிவுத் துறை, பொது மக்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்து பதிவு சேவைகளையும் எளிதாக வழங்கி, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. கடந்த 2024 – 2025-ஆம் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் 33,60,382 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 3,30,565 பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவுத் துறையின் சேவைகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மை உடனும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை – நொளம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வளாகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியால், சுய உதவி குழுவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்பட உள்ள ‘ஒருங்கிணைந்த சேவை மையம்’ திறந்துவைக்கப்பட்டது.
இந்த சேவை மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வில்லங்கச்சான்று விண்ணப்பித்தல், ஆவணத்தின் சான்றிட்ட நகல் விண்ணப்பித்தல், திருமண வடிப்பு விண்ணப்பித்தல், வில்லை (டோக்கன்) முன்பதிவு செய்ய விண்ணப்பித்தல், இணையவழி ஆவணம் உருவாக்குதல், சங்க பதிவு விண்ணப்பித்தல், கூட்டாண்மை நிறுவன பதிவு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் குறைந்த கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையுடன் அளிக்கப்படும்.
இந்த பணிகளை மேற்கொள்ளும் சுய உதவி குழுவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நிலையான வருமான வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கப்பெறும். இந்நிகழ்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஷில்பா பிரபாகர் சதிஷ், இ.ஆ.ப., பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.