பர்மிங்ஹாம் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அணி அந்தத் தோல்வியினால் எப்படி மனம் உடைந்து போயுள்ளது என்பதற்கு நேற்றைய இங்கிலாந்தின் டாஸ் முடிவு, மெதுவான ஆட்டம் போன்றவை சாட்சியமாக நிற்கின்றன.
3.02 ரன் ரேட்டில்தான் இங்கிலாந்து நேற்று ஸ்கோர் செய்தது. பாஸ்பால் யுகம் என்று கூறப்பட்டதற்கு இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆப்பு வைத்து விட்டார் போலும்.
ஷுப்மன் கில்லும், ‘அறுவையான மந்த கிரிக்கெட்டுக்குத் திரும்புவோம்’ என்று அவ்வப்போது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். முகமது சிராஜ், ஜோ ரூட்டிற்கு ஒரு பந்தை ஷார்ட் ஆஃப் குட் லெந்தில் குத்தி லேட் ஸ்விங் செய்து வெளியே எடுக்க ரூட் பீட்டன் ஆனார். சிராஜ் அருகில் சென்று ‘எங்கே பாஸ்பால்?’ Baz-Baz-Bazball! கம் ஆன். நான் அதை பார்க்க வேண்டும்’ என்று ஜோ ரூட்டைச் சீண்டியது ஸ்டம்ப் மைக் மூலம் கேட்டு மீடியா வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
4-வது இன்னிங்ஸ் எந்த இலக்காக இருந்தாலும் சேஸ் செய்வோம் அதுதான் எங்கள் வழி என்று இருந்த பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று நேற்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
லார்ட்ஸ் பிட்சும் மட்டமான பிட்ச். போகப்போக உயிரற்ற பிட்ச் ஆக மாறிவிடும். பிரெண்டன் மெக்கல்லம் ‘கொஞ்சம் உயிரோட்டமான பிட்ச் தேவை’ என்று கேட்டதாகவும் அவர் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன.
இங்கிலாந்து பாஸ்பால் அணுகுமுறையில் ஆடியிருந்தால் ஒருவேளை நிதிஷ் ரெட்டி அடி வாங்கியிருக்கலாம். அல்லது நிதிஷ் ரெட்டி 4-5 விக்கெட்டுகளைக் கூட எடுத்திருக்கலாம். அதைச் சொல்ல முடியாது. ஆனால் நிதிஷ் ரெட்டி நேற்று பென் டக்கெட் விக்கெட்டை எடுத்தது டக்கெட் தன் வாழ்நாள் பூராவும் வருந்த நேரும் அவுட் ஆகும். லெக் திசையில் தொட்டால் சிக்ஸ், பவுண்டரி போக வேண்டிய பந்தை எட்ஜ் ஆக்கி ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனது அவரது உடல் மொழியிலேயே தெரிந்தது. ‘ச்சே, என்ன மாதிரியான ஒரு குப்பைப் பந்தில் அவுட் ஆகி விட்டோம்’ என்று அவர் மீதே கோபமுற்றது தெரிந்தது.
ஆனால், அதே ஓவரில் கிராலியை எடுத்தது நிதிஷ் குமார் ரெட்டி வீசிய கபில் தேவ் ரக லேட் அவுட் ஸ்விங்கர் ஆகும். கிராலி திகைத்துப்போனார். நர்சரி எண்ட்டில் நிதிஷ் ரெட்டியைக் கொண்டு வந்து ஸ்லோப்பில் வீசச் செய்து ஒரு சாமர்த்திய நகர்வை ஏற்படுத்தியவர் கேப்டன் ஷுப்மன் கில். ஆலி போப்பும் வந்தவுடனேயே எட்ஜ் செய்தார்/ அது ஷுப்மன் கில்லுக்குக் கடினமான கேட்ச் ஆனது. இல்லையெனில் நேற்று இங்கிலாந்து ஆல் அவுட் கூட ஆகியிருக்கும்.
வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இங்கிலாந்தின் நிதான அணுகுமுறையை ‘பாஸ்பாலை விட பிளாக்பால்’ அருமையான உத்தி என்று பதிவிட்டிருந்தார். பும்ராவை இங்கிலாந்துக்கு ஆட வரவில்லை என்பது பும்ராவின் முதல் ஸ்பெல்லிலேயே தெரிந்தது. ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை டக்கெட்டின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி உள்ளே கொண்டு வரும் போது நிறைய முறை, ஒரே ஓவரில் 4 முறை வயிற்றில், கையில் என்று அடிவாங்கியபடிதான் ஆடினார் டக்கெட்.
ஜடேஜாவின் பந்துகள் திரும்பின. வாஷிங்டன் சுந்தர் ஒரு அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார். பும்ரா புரூக்கை எடுத்தது ‘புரூட்டல்’ டெலிவரி என்றுதான் கூற வேண்டும் பந்து உள்ளே கட் ஆகி வந்து கொண்டேயிருந்தது. ரூட் ஆஃப் ஸ்டம்பைக் கவர் செய்தும் பந்து உள்ளே சீறிக்கொண்டு ஊடுருவியதை அவரால் தடுக்க முடியவில்லை. பவுல்டு ஆனார். மிக முக்கியமான விக்கெட் என்பதோடு புரூக் தன் பேட்டிங் உத்தி குறித்து நிறைய சிந்திக்க வேண்டிய பந்து ஆகும் அது.
நிதிஷ் ரெட்டி, பென் ஸ்டோக்ஸை 27 ரன்களில் இருந்த போது எல்.பி.செய்தார். ஆனால், களநடுவர் அவுட் தரவில்லை. அது அம்பயர்ஸ் கால். அதிர்ஷ்டம் ஸ்டோக்ஸ் பக்கம். தப்பினார். ஜோ ரூட் தன் சதத்திற்காக அவசரப்படவில்லை. ஒரு மரபான ரூட்டைப் பார்க்க முடிந்தது. இன்று முதல் ஒரு மணி நேரம் அல்லது லஞ்சிற்குள் இங்கிலாந்தை சுருட்டவில்லை எனில் ஜேமி ஸ்மித் நிச்சயம் பாஸ்பால் இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.