விழுப்புரம்: திண்டிவனத்தில் வியாழக்கிழமை (ஜுலை 10) இரவு நடைபெற்ற மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டு, அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில், அரசு மூலமாக ‘உங்களுடன் முதல்வர்’ என ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றுகிறார். தேர்தல் வந்தால்தான் மக்களையும், மற்ற நேரங்களில் வீட்டு மக்களை மட்டுமே நினைப்பவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் பெரும்பான்மையை நிரூபித்தபோது, நம்மிடம் இருந்த எட்டப்பர்கள் துணையுடன் பேரவை தலைவர் நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தனர். மேலும் சட்டையை கிழித்துக் கொண்டு ஸ்டாலின் வெளியே சென்றார். 2026-ல் மற்றொரு முறை சட்டையை கிழித்து கொள்ளும் நிலை வரும்.
கூட்டணியை நம்பி திமுக உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் அதிமுக பலமாக இருக்கும். கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கொள்கை உள்ள கட்சிகளா? திமுகவிடம் கூட்டணி கட்சியினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர். திமுகவினர் எனது தூக்கத்தை தொலைக்கின்றனர் என ஸ்டாலின் கூறுகிறார். எனவே, உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றுங்கள். எதிர்கட்சிகள் மூக்கு மீது விரல் வைக்கும் அளவுக்கு அதிமுகவின் ஆட்சி இருந்தது. இம்மியளவும் குறை இல்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அமலாக்கத்துறை ரெய்டுக்கு தூக்கத்தை தொலைத்து அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தந்தையின் முதல்வர் போர்வை மூலமாக தலைவர், முதல்வர் பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். நான், தொண்டராக இருந்து கட்சிக்கு உழைத்து பொது செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன். திமுகவில் கட்சிக்காக உழைத்த மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை. ஸ்டாலின் மகன் என்பதால், உதயநிதிக்கு கொடுத்துள்ளனர். திமுகவில் ஜனநாயகம் இல்லை. எனவே, அதிமுகவை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களுக்கு வழங்கப்படும் என்ற ஸ்டாலின், 50 நாட்களாக குறைத்துவிட்டார். 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது, இப்போதாவது நீட் தேர்வு ரத்து ரகசியத்தை மக்களுக்கு உதயநிதி சொல்ல வேண்டும். மத்தியில் திமுக கூட்டணியில் இருந்தபோது, 2010-ல் நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால், பொய்யான தகவலை தெரிவித்து மக்களிடம் வாக்குகளை பெற்றுள்ளனர். 2026-ல் ஸ்டாலினுக்கு பை பை என மக்கள் சொல்ல தயாராகிவிட்டனர்” என்றார்.