சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்தி வரும் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர்களை மாற்றுப் பணி அடிப்படையில், அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 35-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டதை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களிடம் 3-வது நாளான நேற்று மதியம் துணைவேந்தர் எஸ். ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாற்றுப் பணி முடிவை திரும்பப் பெறுவது தொடர்பாக துணைவேந்தர் எந்தவிதமான உறுதியும் அளிக்காததால் போராட்டத்தை கைவிட பேராசிரியர்கள் மறுத்துவிட்டனர். பல்கலைக்கழக நிர்வாகம் தனது முடிவை திரும்பப்பெறும் வரை, போராட்டத்தை தொடரப் போவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.