கும்பகோணம்: அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
இது குறித்து அவர் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “அறநிலையத் துறை நிதியில் கல்லூரிகள் கட்டுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. பழநி கோயில் நிதியில் கட்டப்பட்டுள்ள கல்லூரியில், இஸ்லாமியரை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர்.
கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தில் தொடர்புடைய நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், அதுகுறித்து விசாரிக்குமாறு சிபிஐயிடம் பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மனு அளிக்கப்படும்.
சுவாமி மலையில் லிஃப்ட் அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ள நிலையில், பயன்பாட்டுக்கு வந்ததாக அறநிலையத் துறை அமைச்சர் கூறுகிறார். அறநிலையத் துறையிடம் இருந்து இந்து கோயில்களைக் காப்பாற்ற வேண்டும். 2026-ல் இந்தப் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கும்.
கும்பகோணம் மாநகராட்சியில் ரூ.300 கோடியில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ராமதாஸ்-அன்புமணி ஒன்றாக இருந்தால்தான் நல்லது” என்று ஹெச்.ராஜா கூறினார்.