பாட்னா: மகாராஷ்டிராவைப் போல் பிஹாரிலும் வாக்குகளை திருட பாஜக முயற்சி செய்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் பிஹார் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அதற்கடுத்த சில மாதங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி தோல்வி கண்டது. தோல்வி கண்டபோதும் நாங்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லை.
இதுதொடர்பாக தகவல்களை ஆராயத் தொடங்கினோம். அப்போதுதான் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை அறிந்தோம். வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புதிய வாக்காளர்களின் பட்டியல் கேட்டால் அமைதியாக இருக்கின்றனர். இதுவரை எங்களுக்கு பதிலோ அல்லது தகவல்களோ கொடுக்கப்படவில்லை. வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
ஹரியானா, மகாராஷ்டிராவில் நடந்ததை போன்று, பிஹாரிலும் வாக்குத் திருட்டுக்கு பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். ஆனால், பிஹார் மக்கள் இந்தத் திருட்டை நடத்த விட விடமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். ஆனால், பாஜகவின் அறிவுறுத்தல்படி தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.