மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதில் அவருக்கு அறையில் கொண்டுவந்து தரப்பட்ட உணவு கெட்டுப்போய் இருந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கெய்க்வாட், கேன்டீன் சென்று ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கினார். கேன்டீன் ஊழியரை கெய்க்வாட் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சைகளுக்கு புதியவரல்ல. கடந்த ஆண்டு இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தால் ஆத்திரமடைந்த கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கெய்க்வாட்டின் காரை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கழுவும் வீடியோ ஒன்றும் கடந்த ஆண்டு வைரலானது. இதற்கு ‘‘அந்த கான்ஸ்டபிள் எனது காரில் வாந்தியெடுத்து விட்டதால் தாமாக முன்வந்து காரை கழுவினார்’’ என கெய்க்வாட் விளக்கம் அளித்தார்.