சித்தூர்: மாம்பழ விவசாயிகளிடம் குறைகளை கேட்க நேற்று சித்தூர் மாவட்டம் வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க போலீஸ் நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகமானதால், மாங்காய் மண்டிகளில் மாங்காய்களை மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்க நேரிட்டது. கிலோவுக்கு ரூ.4 மானியம் கொடுப்பதாக ஆந்திர அரசு அறிவித்தும் அறுப்பு கூலி கூட கட்டுப்படியாகாததால், சித்தூர், திருப்பதி, மதனபல்லி, நெல்லூர், ஓங்கோல், கர்னூல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி அழித்து வருகின்றனர். இதனால் மா விவசாயிகளின் பிரச்சினைகளை தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி வருகை: இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மா விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிய முடிவு செய்து, நேற்று மா விளைச்சல் அதிகமாக உள்ள சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் மாங்காய் மார்க்கெட்டுக்கு நேரில் வருவதாக அறிவித்தார். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி பங்காரு பாளையத்துக்கு ஹெலிகாப்டர் பயணம் செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்தது.
மேலும், ஊர்வலமோ, பொதுக்கூட்டமோ நடத்த கூடாது என்றும், மாங்காய் மார்க்கெட்டுக்கு ஜெகன் உடன் 500 பேருக்கு மேல் செல்ல கூடாது எனவும் சித்தூர் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி பல கார்களுடன் ஊர்வலமாக பங்காருபாளையம் வந்தார். இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் ஜெகனிடம் அருகே செல்ல முண்டியத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு போலீஸ்காரரும், ஒரு பெண்ணும் மயக்கமடைந்து சாய்ந்தனர். இவற்றை படம் பிடித்த தெலுங்கு பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சிவக்குமாரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் அடித்து அவரிடம் இருந்த கேமராவை பிடிங்கி கொண்டனர்.
காயம் அடைந்தவர்களை பங்காருபாளையம் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். மாங்காய் மார்க்கெட்டுக்கு சென்ற ஜெகன் மா விவசாயிகளிடம் இந்த ஆண்டு விளைச்சல் மற்றும் நஷ்டம் குறித்து பேசினார். பல விவசாயிகள் ஜெகன் முன்னிலையில் மாங்காய்களை டன் கணக்கில் சாலையில்
கொட்டி அழித்தனர்.