நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கி இருக்கிறார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
ஆக.1-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி அறிமுக இயக்குநர் டி.ராஜவேல் கூறும்போது, “ஹீரோ தர்ஷன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கு சென்ற பிறகு அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரிய வருகிறது. அவரைப் போல காளி வெங்கட் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.
அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்று கதை செல்லும். பல ஹாரர் படங்கள் வந்திருந்தாலும் இது தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருக்கும். வழக்கமாக ‘ரூம் மேட்ஸ்’ என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற தலைப்பு ஏன் எனக் கேட்கிறார்கள். படம் பார்க்கும்போது அதற்கான விடை புரியும். முக்கியமான காட்சிகள் வீட்டில்தான் நடக்கிறது என்பதால் அதை செட் போட்டு படமாக்கினோம்.
இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடுவது எங்களுக்கு பலம். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.