புதுடெல்லி: இறக்குமதி-ஏற்றுமதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த பொருளாதார குற்றவாளி மோனிகா கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான அனுமதியை நியூயார்க் நகர நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘‘மோனிகா ஓவர்சீஸ்’’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்களான ராஜன் கன்னா மற்றும் ராஜீவ் கன்னாவுடன் சேர்ந்து நகை வணிகத்திற்கான வங்கி போலி ஆவணங்களை தயார் செய்து வரி இல்லாமல் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசிடமிருந்து உரிமங்களைப் பெற்றார். இதன் மூலம் அவர் ரூ.2.36 கோடி மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்தனர்.
அதன்பின்னர் இந்த உரிமங்களைஅகமதாபாத்தை சேர்ந்த டீப் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அந்த நிறுவனம் இந்த அரசின் உரிமத்தை பயன்படுத்தி வரி இல்லாத தங்கத்தை கோடிக்கணக்கில் இறக்குமதி செய்தது. இந்த மோசடியால் இந்திய கருவூலத்திற்கு 6,79,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி கடந்த 2004-ம் ஆண்டு மோனிகா கபூர் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜன் மற்றும் ராஜீவ் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான மோனிகா கபூர் கடந்த 1999-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால், அவர் 2006-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவரை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்த சிபிஐ அதிகாரிகள் முயற்சி எடுத்து வந்தனர்.
இதனிடையே ராஜன் மற்றும் ராஜீவ் ஆகியோரை கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் மோனிகா கபூரை நாடு கடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணையை தொடர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.