மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடித்த ‘ஒரு நொடி’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘ஜென்ம நட்சத்திரம்’.
இதில் மால்வி மல்கோத்ரா, காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல.ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். கேஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அமோகம் ஸ்டூடியோஸ், வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ஜூலை 18-ல் வெளியிடுகிறார்.
இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமன், “இந்தப் படம், ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லரான ‘ஓமன்’ படம் போல இருக்கும். ‘ஒரு நொடி’ படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு எப்படி அதிர்ச்சியானதாக இருந்ததோ அதேபோல இதன் கிளைமாக்ஸும் கணிக்க முடியாததாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இதில் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். ‘ஒரு நொடி’ படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும்” என்றார்.