ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கலப்பட கள் குடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹைதராபாத் கூகட்பல்லியில் நேற்று அதிகாலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
இவர்களில் சிலர் தனியார் மருத்துவமனைக்கும், சிலர் செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தெலங்கானா மாநில கலால் துறை அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். கலப்பட கள் விவகாரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.