துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசிய இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் ஷுப்மன் கில் டாப் 10-க்குள் இடம் பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவர், அதிகபட்சமாக 2023-ம் ஆண்டு செப்டம்பரில் 14-வது இடம் பிடித்திருந்தார்.
இங்கிலாந்தின் ஹாரி புரூக் (886), சகநாட்டைச் சேர்ந்த ஜோ ரூட்டை (868) 2-வது இடத்துக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (867) 3-வது இடத்திலும், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (858) 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (813) 5-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தில் தொடர்கிறார். முகமது சிராஜ் 6 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தில் உள்ளார்.