ஈஸ்ட் ரூதர்போர்ட்: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள ஈஸ்ட் ரூதர்போர்ட் நகர வட்டத்தில் இந்த அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே பிஎஸ்ஜி அணி துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் 25 நிமிடங்களுக்குள் 3 கோல்களை பிஎஸ்ஜி பதிவு செய்து முன்னிலை பெற்றது.
இதில் பிஎஸ்ஜி அணியின் பேபியன் ருய்ஸ் ஆட்டத்தின் 6 மற்றும் 24-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை பதிவு செய்தார். ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் டெம்பெல்லே ஒரு கோல் பதிவு செய்தார். முதல் பாதி ஆட்டத்துக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி களத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்தது. இருப்பினும் அதன் பலனை அந்த அணியால் அறுவடை செய்ய முடியவில்லை. பிஎஸ்ஜி அணியின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது.
பின்னர் ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி மேலும் ஒரு கோலை பதிவு செய்தது. இந்த முறை கான்ஸோலோ ரமோஸ் பந்தை வலைக்குள் தள்ளியிருந்தார். இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி வெற்றி பெற்றது.
மொத்த ஆட்ட நேரத்தில் சுமார் 69 சதவீதம் தங்கள் வசம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பிஎஸ்ஜி. இதன் பலனாக 681 பாஸ்களை அந்த அணி மேற்கொண்டது. 7 ஷாட்களை ஆன்-டார்க்கெட்டில் வைத்திருந்தது பிஎஸ்ஜி. வரும் 14-ம் தேதி அன்று செல்சீ அணி உடன் இறுதி போட்டியில் விளையாடுகிறது பிஎஸ்ஜி. இந்த ஆட்டம் லூகா மோட்ரிச், ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாக அமைந்தது. தோல்வி உடன் அவர் விடைபெற்றுள்ளார்.